பி.ஏ.பி., பாசன வாய்க்கால் துார்வாரும் பணி விறுவிறுப்பு
பொங்கலுார் : பி.ஏ.பி., வாய்க்காலில் தற்பொழுது மூன்றாம் மண்டல பாசனம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் நான்காம் மண்டல பாசனம் துவங்க உள்ளது. இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தொகுப்பு அணைகள் நிரம்பி உள்ளன. விரைவில் ஆடி பட்டம் துவங்க உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை விவசாயிகள் விரும்புவர். அப்போதுதான் ஆடிப்பட்ட சாகுபடி மேற்கொள்ள முடியும். ஆனால், பருவமழை பொய்த்து போனாலோ, தாமதமாக பெய்தாலோ, ஆவணியில் தான் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால், வரும், 27ல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.தண்ணீர் திறக்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், தண்ணீர் கடைக்கோடி வரை செல்லும் வகையில், பிரதான வாய்க்காலில் உள்ள முட்புதர்களை பொதுப்பணி துறையினர் அகற்றி வருகின்றனர். ஏற்கனவே பாசனம் நடந்த மூன்றாம் மண்டல பாசன மதகுகளுக்கு கான்கிரீட் போட்டு அடைக்க பொதுப்பணித்துறையினர் தயாராகி வருகின்றனர்.கடந்த ஆண்டு வறட்சி யால், முதல் மற்றும் நான்காம் மண்டல பாசனத்துக்கு, இரண்டு சுற்று தண்ணீர் மட்டுமே கிடைத்தது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி உள்ளதால் ஐந்து சுற்று தண்ணீர் நிச்சயம் கிடைக்கும்.வறட்சியின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் விவசாயிகளுக்கு தற்பொழுது திறக்கப்படும் தண்ணீர் வரப்பிரசாதமாக அமையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.