தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்குங்க! பயணியர் வலியுறுத்தல்
உடுமலை: உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு போதிய ரயில்கள் இல்லாததால், தொழிலாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, ரயில்வேக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் தனியார் நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களில் வேலை செய்து வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள், தொழிலாளர்கள் பெரும்பாலும் ரயில்களில் செல்ல விரும்புகின்றனர். கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை வழியாக, தற்போது, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - ராமேஸ்வரம், பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. உடுமலையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு செல்ல, தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் செல்கின்றனர். குறிப்பாக, பண்டிகை, திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தற்போது செல்லும் ரயில்கள் போதுமானதாக இல்லை. இதனால், இந்த ரயில்களில் அமர இடமின்றியும், நெருக்கடியில் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே, மீட்டர் கேஜ் இருந்த போது, ராமேஸ்வரம், துாத்துக்குடி, கொல்லம் பகுதிக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. அகல ரயில்பாதையாக்கப்பட்ட பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இவற்றை இயக்க வேண்டும் என, ரயில் பயணியர், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை வலியுறுத்தி வருகின்றனர். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களும், ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்களும் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.பி.க்களும், மக்கள் பிரதிநிதிகளும் வலியுறுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போது தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.