சாலை விபத்து தவிர்க்க பிளாக் ஸ்பாட்களில் கவனம்
திருப்பூர் நெடுஞ்சாலை கோட்டத்திற்குட்பட்ட சாலை விபத்துகளை தடுக்க, கடந்த நான்காண்டில், 24 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தொழில் நகரான திருப்பூர் மாநகர எல்லைக்குள் மட்டும், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர அவிநாசி, பல்லடம், காங்கயம் உள்ளிட்ட ஊரக பகுதிகளை உள்ளடக்கிய, திருப்பூர் நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உட்பட்ட மக்கள், திருப்பூர் சார்ந்தே தொழில் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டுள்ளனர். இதனால், தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கின்றன.அதே நேரம், சாலை விபத்துகளும் தினசரி நிகழ்வாகவே இருந்து வருகிறது. அதிவேக பயணம், மது அருந்தியபடி, மொபைல் போனில் பேசிய படி, கவனக்குறைவுடன் வாகனங்களை ஓட்டுவது தான், விபத்துக்கு முக்கிய காரணம் என போலீசார் கூறி வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் குறுகலான சாலை, சாலையில் உள்ள குழிகள், சாலையோர ஆக்கிரமிப்புகள் உட்பட, சாலையின் கட்டமைப்புகளும் விபத்துக்கு காரணமாக அமைந்து விடுகிறது.இந்நிலையில், சாலை விபத்து தவிர்க்க, போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது கள ஆய்வில் ஈடுபட்டு, சாலை விபத்துக்கான காரணங்களை அறிந்து, அதற்கான தீர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும், கடந்த நான்காண்டில், 24 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், திருப்பூர் கோட்டத்தில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 69.25 கி.மீ., நீளச்சாலைகள், 129.16 கோடி ரூபாய் மதிப்பில், அகலப்படுத்தி, உறுதிபடுத்தப்பட்டுள்ளன. அடிக்கடி விபத்து நேரிடும் பகுதிகள் என, 121 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, 4.95 கோடி ரூபாய் செலவில், விபத்து தவிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒரே இடத்தில் இரண்டு, அதற்கு மேல் தொடர்ச்சியாக உயிரிழப்பு விபத்து ஏற்படும் பகுதிகள் 'ப்ளாக் ஸ்பாட்' என, போலீசாரால் அடையாளம் காணப்படுகிறது. அங்கு, விபத்து தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.அந்த வகையில், திருப்பூர் கோட்டத்தில், 'ப்ளாக் ஸ்பாட்' பகுதிகள் என, 15 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, 8.07 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 இடங்களில் சாலை பாதுகாப்பு தணிக்கையின் படி, 8.50 கோடி ரூபாய் செலவில் விபத்து தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நான்காண்டு சாதனை பட்டியலில் இந்த விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
விதிகளை மதிப்பதும் முக்கியம்
சாலை விபத்து தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு நடடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அதிவேக பயணம், கவனக்குறைவு, சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டுவது போன்றவை தான் விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது என, போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் கூறுகின்றனர். எனவே, சாலை விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளுக்கு கடிவாளம் போடுவதன் வாயிலாக மட்டுமே விபத்துகளை முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்பது, நிரூபணமாகிறது.