உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறைகேட்பு கூட்டத்தில் மனுக்களை குவித்த மக்கள்!

குறைகேட்பு கூட்டத்தில் மனுக்களை குவித்த மக்கள்!

திருப்பூர்; மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 458 மனுக்கள் பெறப்பட்டு, உரிய மேல் நடவடிக்கைகள் எடுப்பதற்காக, துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குவாரி உரிமம் ரத்தாகுமா?

மடத்துக்குளம் மக்கள்:மைவாடி கிராமத்தில், தனியார் ஒருவர், தவறான தகவல்களை அளித்து, கல்குவாரி அனுமதி பெற்றுள்ளார். குவாரியிலிருந்து 20 அடிக்குள் குடியிருப்பு, 100 மீ., க்குள் கிணறு, போர்வெல் உள்ளன. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, மூன்று ஆண்டுகளாக குவாரி செயல்படவில்லை. தார்சாலை அமைத்தபின்னர்தான், குவாரிக்கு அனுமதி வழங்கவேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டது. கடந்த ஜூன் 13ம் தேதி, அதிக திறன் மிக்க வெடி பொருட்களை பயன்படுத்தி, பாறைக்கு வெடி வைத்துள்ளனர். குடியிருப்புக்குள் கற்கள் வந்து விழுந்தன. உயிர் பலி விபத்து அபாயம் உள்ளது. சிறு கனிம விதிகளை மீறி, தவறான தகவல்களை அளித்து, மைவாடியில் இயங்கும் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யவேண்டும்.

ஜி.பி.எப்., தொகை கிடைக்குமா?

ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் கற்பகம்:பல்லடம் ஒன்றியம், புளியம்பட்டி துவக்கப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து, ஜூன் மாதம் ஓய்வு பெற்றேன். ஜி.பி.எப்., கணக்கில் உள்ள, மொத்தம் 1.76 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என, கருவூல கணக்கு துறைக்கு கடிதம் அனுப்பினேன். ஆறு மாதத்துக்கு மேலாகியும் பல்லடம் ஒன்றிய அலுவலக அதிகாரிகள், தொகையை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இது தொடர்பாக, ஜூன் மாதம், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடமும் (சத்துணவு) மனு அளித்துள்ளேன். ஆனாலும், நடவடிக்கை இல்லை. மிகுந்த மன உளைச்சலில் உள்ள எனக்கு, ஜி.பி.எப்., தொகையை உடனடியாக வழங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதிகாரிகள் முறைகேடு

அவிநாசி ஒன்றியம், சாவக்கட்டுப்பாளையம் ராமசாமி:சாவக்கட்டுப்பாளையம் கிராமத்தில், எனது தந்தைக்கு சொந்தமான, 1.47 ஏக்கர் மற்றும் 27 சென்ட் மானாவாரி பூமி உள்ளது. தந்தை இறந்த பின், எனது முழு அனுபவத்தில் இருந்துவருகிறது. சொத்துக்களுக்கு முறையான வருவாய் ஆவணங்கள், வரி செலுத்தியதற்கான ஆவணங்களும் உள்ளன. இந்நிலையில், எங்களுக்கு சொந்தமான நிலத்தில், சட்டத்துக்கு புறம்பாக, சம்மந்தமே இல்லாத ஐந்து பேரின் பெயர்களை சேர்த்துள்ளனர். இதற்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் பக்கபலமாக இருந்துள்ளனர். எங்களுக்கு சொந்தமான பட்டாவில், சட்டத்துக்கு புறம்பாக இணைக்கப்பட்டவர்களின் பெயர்களை நீக்கம் செய்யவேண்டும். முறைகேட்டுக்கு துணைபோன அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கணவன் - மனைவி 'தர்ணா'

முத்துசாமியின் மனைவி ராஜேஸ்வரி கூறியதாவது:அரசு வழங்கிய பட்டா நிலத்தில், 20 ஆண்டுகளாக வசித்துவருகிறோம். கணவர் முத்துசாமிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால், குவாரி உரிமையாளரிடமிருந்து, 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றோம். மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், குவாரி உரிமையாளர், எங்கள் வீட்டை காலி செய்து, பொருட்களை வெளியே வைத்துவிட்டார்.அந்தவீட்டில் தற்போது வேறு நபர்களை குடி அமர்த்தியுள்ளார். எங்கள் வீட்டை ஆக்கிரமித்துள்ள குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்லடம் போலீஸில் புகார் அளித்தும்; கலெக்டரிடம் ஆறு முறை மனு அளித்தும் எந்த பயனுமில்லை. குவாரி உரிமையாளரிடமிருந்து எங்கள் வீட்டை மீட்டுத்தர வேண்டும், என்றார்.

ஆட்டோக்களை முறைப்படுத்த மனு

சமூக ஆர்வலர் அண்ணாதுரை:மாவட்டம் முழுவதும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. கட்டணம் முறைப்படுத்துதல் இல்லாததால், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். சில ஆட்டோக்களில், உரிய ஆவணங்கள் இருப்பதில்லை. மாவட்டத்தில் ஆட்டோ பயண கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்; அனைத்து ஆட்டோக்களுக்கும் மீட்டர்கள் பொருத்த வேண்டும். டிரைவிங் லைசென்ஸ், வாகன சான்று விவரங்களை பயணிகளுக்கு தெரியும்வகையில் வைக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ