மக்கள் குறைகள் ஏராளம்; தீர்வு கிடைத்தால் நலம்!
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 466 மனுக்கள் பெறப்பட்டன.பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி குடிநீர், துாய்மை பணியாளர்கள்:கரைப்புதுார் ஊராட்சியில், 22 குடிநீர் பணியாளர், 5 துாய்மை பணியாளர், ஒரு எலக்ட்ரீசியன் பணிபுரிகிறோம். குடிநீர் தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு பணியாளர், 5 முதல் 6 டேங்க் களை கவனிக்கவேண்டியுள்ளதால் பணிச்சுமை ஏற்படுகிறது. ஊராட்சியில் கூடுதல் குடிநீர் பணியாளர் நியமிக்கவேண்டும். 20 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் துாய்மை, குடிநீர் பணியாளர்களை, பணிநிரந்தரம் செய்து, சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.பாரதி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்:நெருப்பெரிச்சல் - பாரதிநகர் அடுக்குமாடி குடியிருப்பில், 6வது பிளாக்கில் குடியிருக்கும் பெண் ஒருவர், விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் ஊற்றியும், கற்களை கொண்டு எறிந்தும், குழந்தைகளை விளையாட விடாமல் தடுக்கிறார். இதுகுறித்து கேட்ட குடியிருப்போர் நல சங்கத்தினரை, தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.பல்லடம், கணபதிபாளையம் ரோடு, உதயம் நகர் பகுதி பொதுமக்கள்:உதயம் நகரில், தனியார் ஒருவர் 4 சைட் களை வாங்கியுள்ளார். அதில், ஸ்ரீ கபாலகாளி அம்மன் ருத்ர பீடம் என்ற பெயரில், ஆக்ரோஷமாக நின்ற நிலையிலும், சயன கோலத்திலும் பிரமாண்டமான இரண்டு காளி சிலைகளை அமைத்துள்ளார். இரவு நேரங்களில், வெடி வெடிப்பது, தீபம் ஏற்றுவது, நள்ளிரவில் பூஜை செய்வது என, மக்களை மிரட்டுகின்றனர். வளர்ப்பு நாயை விஷம் வைத்து கொன்றுவிட்டனர். இதனால், அப்பகுதியில் வீடு கட்ட மக்கள் அச்சப்படுகின்றனர். அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள கோவிலை அகற்றி, மக்களின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டும்.சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை:அனுப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன் போதிய இடவசதி இல்லாததால், கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கு கூடுதல் நிலம் ஒதுக்கீடு செய்துதரவேண்டும். அனுப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் வசதி செய்து கொடுக்க வேண்டும். இடியும் நிலையில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டவேண்டும்.இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.