மேலும் செய்திகள்
விவசாயிகள் அட்டை பெற நான்கு நாட்கள் முகாம்
10-Jul-2025
பல்லடம்; பல்லடம் அடுத்த கரடிவாவியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை ஒன்றில், பெண் ஒருவர், நேற்று முன்தினம் ஆய்வுக்கு வந்தார். தனது பெயர் சாந்தி என்றும், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் என்றும் கூறி, கடையில் ஆய்வு மேற்கொண்டார், கடைகளில் எடை போடும் கருவியில் முத்திரை இல்லை என்று கூறி, 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இத்தொகையை வசூலித்த அவர், அதற்கான ரசீதினை அலுவலகத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், பொதுமக்கள், அடையாள அட்டையை காண்பிக்குமாறு அவரிடம் கூறினர். அடையாள அட்டை இல்லை என்று அவர் கூற, பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ''ரசீது கொடுக்காமல் எதற்காக பணம் வசூலிக்கிறீர்கள். தொழிலாளர் நலத்துறை என்று எழுதப்பட்ட தனியார் வாகனத்தில் வந்துள்ளீர்கள். அடையாள அட்டையையும் காண்பிக்க மறுக்கிறீர்கள். எனில், நீங்கள் தொழிலாளர் நலத்துறைதானா என்பதை நாங்கள் எப்படி நம்புவது?'' என, வர்த்தகர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதன்பின், காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்ததும், சாந்தி, தனது அடையாள அட்டையை எடுத்து காட்டினார். விசாரித்த போலீசார், அவர் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் தான் என்பதை உறுதி செய்தனர். ரசீது இல்லாமல் பணம் வசூலித்ததுடன், பொதுமக்கள் கேட்கும் போதே அடையாள அட்டையையாவது காட்டியிருக்க வேண்டும் என, போலீசார் சாந்திக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து, வசூலித்த, 7 ஆயிரம் ரூபாய் பணம் கடை உரிமையாளரிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அழைப்பை ஏற்க மறுத்தனர்.
10-Jul-2025