ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை பெரிய கோட்டை மக்கள் ஆவேசம்
உடுமலை: உடுமலை ஒன்றியம், பெரிய கோட்டை ஊராட்சி, பெரியகோட்டை கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பெண்கள், காலி குடங்களுடன் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கூறியதாவது: பெரிய கோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை. கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பது குறித்து, ஊராட்சி செயலரிடம் அலுவலகத்திற்கு நேரடியாகச்சென்று புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை. அதே போல், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்படாமல், மக்கள் பாதித்து வருகின்றனர். மேலும், பயணியர் நிழற்கூரை, சிதிலமடைந்து எந்நேரமும் இடிந்து விழுந்து, பள்ளி குழந்தைகள், மக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. குப்பை அகற்றுவது என அடிப்படை பணிகள் கூட மேற்கொள்ளாமல், பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும், அலட்சியமாக பதில் அளிக்கின்றனர், என ஆவேசமாக கூறினர். போலீசார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பேச்சு நடத்தி, 'குடிநீர் வினியோகம் சீரமைக்கப்படும். நிழற்கூரை அகற்றவும், சுகாதார வளாகம் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.