மக்கள் குரல்கள் உதாசீனம்
குடியிருப்பு பகுதிகள், கல்வி நிறுவனங்கள், கோவிலுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி, மாவட்டத்தின் பல்வேறு பகுதி பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில் தொடர்ந்து மனு அளிக்கின்றனர்.மதுக்கடை அகற்றுவது தொடர்பான பெரும்பாலான கோரிக்கைகள், நிறைவேற்றப்படுவதில்லை.திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் அரசு தொடக்கப்பள்ளி அருகே செயல்படும் (கடை எண்: 1939) டாஸ்மாக் மதுக்கடை பாரில், 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாகவும்; மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்திவரும் அந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரியும் கொங்கு வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தொடர்ந்து மனு அளிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாநகராட்சி 48வது வார்டு, நல்லுார் பஸ் ஸ்டாப் அருகே, அங்கன்வாடி, கோவில், சர்ச், சுகாதார நிலையம் அமைந்துள்ள பகுதியில், மதுக்கடை அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் விஜயலட்சுமி கோபால்சாமி மனு அளித்திருந்தார். இதையடுத்து, அப்பகுதியில் மதுக்கடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டில், பாரப்பாளையம் - ராயபுரம் ரோட்டில், டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. குடியிருப்பு பகுதிகள் அதிகமுள்ள, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் கடந்து செல்லும் பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என, தீபம் பவுண்டேஷன் மற்றும் பாரப்பாளையம், ராயபுரம் பகுதி மக்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். மதுக்கடை அமைப்பதை கைவிடும்வரை போராடுவது என முடிவு செய்துள்ளனர்.ஊத்துக்குளி தாலுகா குன்னத்துார் பேரூராட்சி 10வது வார்டில், பள்ளி, கோவில், குடியிருப்புக்கு அருகாமையில் தனியார் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும்;பஸ் ஸ்டாண்ட் அருகே, கமராஜர் சிலைக்கு எதிரே உள்ள மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரியும், பா.ஜ., ஊத்துக்குளி வடக்கு மண்டல தலைவர் சிவக்குமார் தலைமையிலானோர், கலெக்டரிடம் முறையிட்டு வருகின்றனர்.இவ்வாறு மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும், மதுக்கடைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.