பூச்சி நோய் கட்டுப்பாடு விழிப்புணர்வு வழிகாட்டி
திருப்பூர்; வேளாண்மை - உழவர்நலத்துறை சார்பில், பூச்சிநோய்களை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வழிகாட்டி, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழங்கும் வகையில், பூச்சி நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன்மூலமாக பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், பூச்சிநோய் விழிப்புணர்வு வழிகாட்டி தயாரித்து இலவசமாக வினியோகித்து வருகிறது.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், பூச்சி மேலாண்மை முறை, பயிர்சாகுபடிக்கு நன்மை செய்யும் பூச்சி மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் என, விவசாயிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.வண்ண படங்களுடன், வழுவழு தாளில், 14 பக்கங்கள் கொண்ட மாதாந்திர காலண்டர் போன்ற பூச்சி நோய் தாக்கம், அதன் பாதிப்புகள் மற்றும் தடுப்பு முறைகள் என, அனைத்து வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக, பூச்சிநோய் கட்டுப்பாடு விழிப்புணர்வு வழிகாட்டி காலண்டர் வழங்கப்பட்டது.விவசாய பணிகளில், பூச்சி மேலாண்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.