மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டத்தில் மனுக்களை குவித்த மக்கள்!
08-Jul-2025
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக் களிடமிருந்து 453 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, துறைசார்ந்த அரசு அலுவலர் களிடம் சேர்க்கப்பட்டது. வேலையிழப்பு நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மனு அளித்த பொங்குபாளையத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கூறியதாவது: திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சியில், நுாறு நாள் வேலை திட்டத்தில், 200 பேர் வரை வேலை செய்துவந்தோம். படிப்படியாக ஆள் குறைப்பு செய்து, தற்போது ஐந்து பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்படுகிறது. இதனால், ஏராளமானோர் வேலையின்றி தவிக்கிறோம். நுாறுநாள் வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், வேலை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். சாலை ஆக்கிரமிப்பு கெரடமுத்துார் ஊர் பொதுமக்கள் அளித்த மனு: பொங்கலுார் ஒன்றியம், வட்டமலை பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கெரடமுத்துாரில், க.ச.எண்., 580, 581க்கு இடையே உள்ள சாலையை, அருகாமை நில உரிமையாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், ரோடு குறுகலாகி, போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை மீட்டுத்தரவேண்டும். முந்தைய திட்டமே தேவை சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை அளித்த மனு: பல்லடம் நகரில், கடந்த 2018ல், புற வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது; இதற்காக, 45 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, குடியிருப்பு பகுதிகள் வழியாக, இணைப்புச்சாலை அமைக்க, திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களின் வீடுகள், கிணறு, பி.ஏ.பி., வாய்க்கால் பாதிக்கப்படும். புதிய திட்டத்தை கைவிடவேண்டும். கடந்த 2018ல் நிதி ஒதுக்கப்பட்ட திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டும். மயானம் 'கபளீகர' முயற்சி மடத்துக்குளம் தாலுகா, கிழக்கு நீலாம்பூர் பகுதி மக்கள் திரண்டுவந்து அளித்த மனு: மடத்துக்குளம் தாலுகா, கிழக்கு நீலாம்பூரில், 300 குடும்பங்கள் வசிக்கிறோம். எங்கள் வடக்கு பகுதியில் உள்ள இடத்தை, 150 ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்திவந்தோம். தற்போது, இப்பகுதியை தனியார் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்தி, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் எங்களுக்கு பட்டா பெற்றுத்தரவேண்டும். மயானத்துக்கு, தடுப்புச்சுவர், காத்திருப்பு கூடம், மின் விளக்கு, தண்ணீர் வசதிகள் செய்துதரவேண்டும். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து மொத்தம் 453 மனுக்கள் பெறப்பட்டன.
08-Jul-2025