பறவை நோக்கர்களை அதிகப்படுத்த திட்டம்!
திருப்பூர் : பறவை நோக்கர்கள் மற்றும் ஆர்வலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.வானிலை மாற்றம் மற்றும் இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இயற்கை பல்லுயிர் சூழலில் பறவைகளின் பங்களிப்பு முக்கியம் என்ற அடிப்படையில், தமிழக பறவை ஆர்வலர்கள் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுக்க, பறவை ஆர்வலர்கள் மற்றும் பறவை நோக்கர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்த கூட்டமைப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது.திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:ஆண்டுதோறும் மாநிலத்தின் ஏதாவது ஒரு இடத்தில் பறவை ஆர்வலர்கள் மற்றும் பறவை நோக்கர்கள் ஒன்று கூடி, பறவைகளின் வாழ்வியல் சூழல் குறித்து விவாதிப்பார்கள். பறவை நோக்கர்கள் மற்றும் ஆர்வலர்கள், 'இ-பேர்டு' என்ற உலகளாவிய இணைய தளத்தில், பறவைகள் குறித்த விவரங்களை பதிவேற்றுகின்றனர்.அவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது, ஆண்டு தோறும் எந்தெந்த நாட்களில், எது மாதிரியான பறவை, எந்த எண்ணிக்கையில் இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.இந்த தரவுகளை ஆராயும் போது, எந்தெந்த பறவைகள் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது, அவற்றின் எண்ணிக்கை குறைய காரணம் என்ன என்பதை அறிந்துக் கொள்ள முடியும். ஒவ்வொருவரும், பறவை நோக்கலில் ஈடுபட்டால் மட்டுமே, இந்த முயற்சி முழுபலன் தரும்.மாநிலத்தில் கோவை, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் பறவை ஆர்வலர்கள், நோக்கர்கள் உள்ளனர். இருப்பினும், பல மாவட்டங்களில் பறவை ஆர்வலர்கள், நோக்கர்கள் இல்லை.இ-பேர்டு இணைய தளம் வாயிலாக பறவைகள் குறித்த பதிவு எங்கெல்லாம் குறைவாக இருக்கிறது என்பதை அறிந்த, அந்த பகுதிகளில், கூட்டம் நடத்தி பறவை ஆர்வலர்கள், நோக்கர்களை அதிகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் தான், கடந்த, ஜன., மாதம் பெரம்பலுாரில் கூட்டம் நடந்தது. பறவை நோக்கலில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு பிரத்யேக பயிற்சியும் வழங்கி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.