நீர்நிலையில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு; மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்க அழைப்பு
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.பிளாஸ்டிக்கை ஒழிக்கும் முயற்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் நடப்பாண்டு முழுவதும், மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை நெகிழி சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து, பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நிகழ்வு இன்று முதல் துவங்குகிறது.இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி, 25ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. நொய்யலாற்றங்கரை பகுதிகளான காசிபாளையம், ஆண்டிபாளையம், ராயபுரம், சிறுபூலுவப்பட்டி, நல்லாற்றங்கரை பகுதிகளான அங்கேரிபாளையம், நஞ்சராயன்குளம் மற்றும் உப்பாறு அணை, அமராவதி, திருமூர்த்தி அணைகள், சாமளாபுரம் ஏரி சுற்றுப்பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.நம் மாவட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும், அருகாமையில் நடைபெறும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பில், தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் புறக்கணிப்பை அங்கமாக்கி, பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.