ஓட்டல்களில் போலீசார் கெடுபிடி; போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு
திருப்பூர்; திருப்பூரில் உள்ள லாட்ஜ்களில் சோதனை என்ற பெயரில் போலீசார் கடுமையாக நடந்து கொள்வதாக, லாட்ஜ் உரிமையாளர்கள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.திருப்பூர் லாட்ஜிங் ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் அளித்த மனு:திருப்பூரில் உள்ள லாட்ஜ்களில், அண்மைக்காலமாக சோதனை என்ற பெயரில், கமிஷனர் அமைத்துள்ள மூன்று பேர் கொண்ட போலீஸ் குழுவினர், சட்ட விரோத போதை பொருள் தடுப்பு மற்றும் சோதனை என்ற பெயரில், கடுமையாக நடந்து கொள்கின்றனர். இதனால், லாட்ஜ்களில் தங்கியுள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவுகிறது.திருப்பூருக்கு பணி, தொழில், வர்த்தகம் நிமித்தமாக தினமும் வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து பலரும் வந்து செல்கின்றனர். இதில் பலரும் ஓட்டலில் அறை எடுத்து தங்குகின்றனர்.திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு தங்கும் வாடிக்கையாளர்களை போலீசார் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.சட்ட விரோத சம்பவங்கள் நடப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. விசாரணை என்ற பெயரில் வாடிக்கையாளர்கள், ஊழியர்களை அச்சுறுத்துகின்றனர்.எனவே, சட்ட விரோதமான எந்த செயலும் அனுமதிக்கப்படாத நிலையிலும், போலீசார் வழங்கும் அறிவுரைக்கு ஏற்பவும் தொடர்ந்து செயல்படும் நிலையில், இது போன்ற கெடுபிடிகள் குறித்து உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.