மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
16-Sep-2025
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, கருப்பராயன் கோவில் அருகில் சிலர் சந்தேகப்படும் வகையில் கூட்டமாக நின்று கொண்டிருப்பதாக வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசாரை பார்த்ததும் கும்பல் தப்பியோடியது. அதில், ஒருவரிடம் விசாரித்தனர். எம்.எஸ்., நகரை சேர்ந்த தம்பி பிரபாகரன், 25 என்பதும், அவர் தேவகணேஷ் என்பவரை கொலை செய்ய கத்தியுடன் நின்று நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது தெரிந்தது. பிரபாகரனை வடக்கு போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா போதையில் பணம் பறிப்பு
கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்தவர் கவுதம், 20. இவர் தனது நண்பரான மணியை பார்க்க திருப்பூர் ஓடக்காட்டில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த மணி மற்றும் அடையாளம் தெரியாத, இருவர், கஞ்சா போதையில் கவுதமிடம் தகராறு செய்தனர். கவுதம் வைத்திருந்த மொபைல் போன், 2 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் மீது 'போக்சோ'
திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 25. இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இவர் வீட்டு அருகே இருந்த, 17 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினார். ஆசை வார்த்தை கூறி பழகி வந்த அவர், கடந்த, 13 ம் தேதி குன்னத்துாரில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார். சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்ட அவர், தாக்கியும் உள்ளார். புகாரின் பேரில், கே.வி.ஆர்., நகர் மகளிர் போலீசார் விசாரித்தனர். சங்கர் மீது போக்சோ வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
தொழிலாளி 'போக்சோ' வில் கைது
திருப்பூர், மங்கலத்தை சேர்ந்தவர் முருகானந்தம், 40. தொழிலாளி. வீட்டருகில் இருந்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார். சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், கே.வி.ஆர். நகர் அனைத்து மகளிர் போலீசார் முருகானந்தம் மீது 'போக்சோ' வழக்குபதிந்து கைது செய்தனர்.
ரேஷன் அரிசி விற்ற 2 பேர் கைது
திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள், காங்கயம் சுற்றுப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு அரிசி ஆலைகளுக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அவ்வகையில், எஸ்.ஐ., கபில்தேவ் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். பட்டியாண்டிபாளையத்தை சேர்ந்த மகாலிங்கம், 48, பல்வேறு கிராம மக்களிடம் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கி, மில்லுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், மகாலிங்கம், கதிர்வேல் ஆகியோரை கைது செய்தனர். 954 கிலோ ரேஷன் அரிசி, 81 கிலோ பருப்பு, நான்கு லிட்டர் பாமாயில், மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்தனர். குழந்தை இறந்ததால் போராட்டம்
திருப்பூர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அபிமன்பு, 24; இவரது மனைவி நாகஜோதிகாவுக்கு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், மதியம் குழந்தை திடீரென இறந்து விட்டது. குழந்தைக்கு உரிய மருத்துவம் செய்யவில்லை என்று குற்றம்சாட்டி, ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனை கண்ணாடியை உடைத்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, விசாரித்து வருகின்றனர்.
16-Sep-2025