கோர்ட் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு
திருப்பூர்; நெல்லை கோர்ட் வளாகத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த வாலிபர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்தக் கொலை தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பல தரப்பில் இருந்து சட்டம்- ஒழுங்கு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த கொலை சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, கமிஷனர், எஸ்.பி.,க்களுக்கு போலீஸ் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.திருப்பூர், பல்லடம் ரோட்டில், மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், 2 எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் என, ஐந்து பேர் துப்பாக்கி ஏந்திய நிலையில் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துவங்கினர்.அதேபோல், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதியில் உள்ள கோர்ட்டுகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.