7.99 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், இந்தாண்டு 7.99 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.ரேஷனில் அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு, தமிழக அரசு, ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிவருகிறது. நடப்பாண்டு, ஒரு கிலோ பச்சரிசி; ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம்தோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகளில், மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 2 கார்டுதாரர்கள் உள்ளனர்.சர்க்கரை கார்டுகள் மற்றும் 'என்' கார்டுகள் நீங்கலாக, அனைத்து அரிசி கார்டுகள், போலீஸ் கார்டுகள், ஓ.ஏ.பி., கார்டுகள், 7 லட்சத்து 98 ஆயிரத்து 856 கார்டுகள்; 324 இலங்கை தமிழர் காடுகள் என, மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 180 கார்டுகளுக்கு பொங்கல் இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.அவிநாசி தாலுகாவில், 83,003 கார்டுகள்; தாராபுரத்தில், 98,386; காங்கயத்தில், 78,356; மடத்துக்குளத்தில் 37,246; பல்லடத்தில், 82,062; திருப்பூர் வடக்கு தாலுகாவில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 833; திருப்பூர் தெற்கில், 1 லட்சத்து 35 ஆயிரத்து 39; உடுமலையில், 1 லட்சத்து 8462; ஊத்துக்குளியில் 36,469 கார்டுதாரர்கள் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பயனாளிகள் பட்டியலில் உள்ள கார்டுதாரர்களுக்கு விரைவில் டோக்கன் வழங்கப்பட்டு, வரும் 9 ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட உள்ளது.
கரும்பு கொள்முதலுக்கு ஆயத்தம்
தமிழகம் முழுவதும் கரும்பு பயிரிடும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவுத்துறை வசம் உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, கரும்பு கொள்முதல் செய்யும் பணிகளில் மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். கரும்பு விளைச்சல் உள்ள மாவட்டங்களுக்கு சென்று, விவசாயிகளிடம் பேசி, மாவட்டத்துக்கு தேவையான கரும்பு கொள்முதல் செய்யும் பணியில் கூட்டுறவு அலுவலர் குழு களமிறங்கியுள்ளது.