உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பவர் டேபிள் நிறுவனங்கள் போராட்டம்; கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பு; பின்னலாடை நிறுவனத்துக்கு எதிர்ப்பு

பவர் டேபிள் நிறுவனங்கள் போராட்டம்; கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பு; பின்னலாடை நிறுவனத்துக்கு எதிர்ப்பு

திருப்பூர்; ஏழு மாதமாக கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்துவரும் சோளிபாளையம் ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு ஆடை தைத்துக்கொடுப்பதை நிறுத்தி, 300 பவர்டேபிள் நிறுவனங்கள் போராட்டத்தை துவக்கியுள்ளன.கடந்த 2022ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி, கடந்த 2024, ஜூன் மாதம் முதல், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், பவர்டேபிள் நிறுவனங்களுக்கு, 7 சதவீதம் கட்டண உயர்வு வழங்கவேண்டும். சோளிபாளையத்திலுள்ள ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு, 300 பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்துக்கொடுத்து வருகின்றன. இந்த நிறுவனம், 7 சதவீத கட்டண உயர்வு வழங்காமல், கடந்த ஏழு மாதங்களாக இழுத்தடித்துவருகிறது. லட்சுமிநகரில் உள்ள பவர்டேபிள் உரிமையாளர் சங்க அலுவலகத்தில், அவசர கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு பின் சங்க செயலாளர் முருகேசன் கூறியதாவது:சோளிபாளையத்தில் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளும் ஆடை உற்பத்தி நிறுவனம், தையல் கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்துவருகிறது. ஏற்கனவே உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்தபோது, உடனடியாக கட்டண உயர்வு வழங்கிவிடுவதாக, கடந்த ஆக., 15ம் தேதி உறுதிமொழி கடிதம் அளித்தனர். இன்னும் கட்டண உயர்வு வழங்கவில்லை. தொழிலாளர் சம்பள உயர்வு, மின் கட்டண உயர்வு என, பவர்டேபிள் நிறுவனங்களின் உற்பத்தி செலவினம் உயர்ந்துவருகிறது. கட்டண உயர்வு வழங்க மறுப்பது வேதனை அளிக்கிறது. அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, சோளிபாளையம் ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு ஆடை தைத்துக்கொடுக்கும் 300 பவர்டேபிள் நிறுவனங்களும் இன்று முதல் (நேற்று) உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளன. அந்த நிறுவனத்திடமிருந்து ஆடை தயாரிப்புக்கான துணிகளை பெறுவது, தயாரித்த ஆடைகளை அனுப்பிவைப்பது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்படுகின்றன.இதனால் அந்நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடை உற்பத்தி முடங்கும். கட்டண உயர்வு வழங்கும்வரை இந்த உற்பத்தி நிறுத்தம் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !