ஒன்றிய அலுவலகம் தற்காலிக இடமாற்றத்துக்கு தயார்; பணிகள் துவங்கியது
உடுமலை; உடுமலையில் ஒன்றிய அலுவலகம், தற்காலிகமாக பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படுவதற்கான, இடமாற்ற பணிகள் துவங்கியுள்ளன.உடுமலை ஒன்றியத்தில், மொத்தமாக 38 ஊராட்சிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் ஒன்றிய நிர்வாகத்தில், கிராமப்பகுதி பள்ளிகள், கிராமப்புற துாய்மை, திடக்கழிவு மேலாண்மை, சமூக நலத்துறை, வேலை உறுதி திட்டம், மக்கள் நல திட்டங்கள் உட்பட பல்வேறு பிரிவுகளும் உள்ளன.அனைத்து துறைகளைச்சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த அலுவலகத்தில் பணி செய்கின்றனர். ஒன்றிய அலுவலக கட்டடம் மிகவும் பழமையானதாகவும், பரப்பளவு குறைவாக இருப்பதால், இடநெருக்கடியும் தொடர்ந்து வந்தது.இந்நிலையில், புதிய கட்டடம் அமைப்பதற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில், நடப்பாண்டில் ஊரக வளர்ச்சித்துறை அதற்கான அனுமதி வழங்கியுள்ளது.தற்போது உள்ள பழமையான கட்டடத்தை அப்புறப்படுத்தி, புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிய கட்டடம் அமைக்கும் வரை, தற்காலிகமாக நகராட்சி பழைய கட்டடத்தில் ஒன்றிய நிர்வாகம் செயல்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளன.ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது:நகராட்சி அலுவலக வளாகத்தில், ஒன்றிய நிர்வாகத்தை மாற்றுவதற்கு ஒவ்வொரு கட்டமாக பணிகள் நடக்கிறது.பல்வேறு திட்டங்கள் சார்ந்த கோப்புகள் உள்ளிட்ட அனைத்தும், அங்கு கொண்டு செல்லப்படுகின்றன. அடுத்து, இணைய வசதி ஏற்படுத்துவதற்கும் பணிகள் நடக்கிறது.முழுமையான பணிகள் நிறைவு பெற்ற பின், முற்றிலும் ஒன்றிய நிர்வாகம் அங்கு செயல்படும். விரைவில் இடமாற்றும் பணிகள் நிறைவு பெறும் வகையில், செயல்பட்டு வருகிறோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.