பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம்; 500 பேருக்கு இயந்திரம் வழங்கல்
திருப்பூர்: கதர் கிராம தொழில் ஆணையம் சார்பில், பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிராமோத்யக் விகாஸ் யோஜனா மற்றும் காதி விகாஸ் யோஜனா ஆகியவற்றின் சார்பில் வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு கருவி மற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.மும்பையில் உள்ள காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைமையகத்தில் இதற்கான விழா நடந்தது. ஆணைய தலைவர் மனோஜ்குமார் தலைமை வகித்து காணொலி வாயிலாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் கிராம தொழில் மற்றும் கை வினைஞர்களுக்கு கருவிகள் மற்றும் இயந்திர தொகுப்புகளை வழங்கினார்.இதில், 1,59,016 புதிய வேலைகளை உருவாக்கும் வகையில் பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 14,456 புதிய யூனிட்களுக்கு 469 கோடி ரூபாய் முதலீட்டு தொகை வழங்கப்பட்டது.இதுதவிர, புதிதாக 5 ஆயிரம் அலகுகள் துவக்கம், புதுப்பிக்கப்பட்ட, 44 காதி பவன்கள் திறப்பு மற்றும் 750 காதி தொழில் பட்டறைகள் திறப்பு விழா ஆகியனவும் நடைபெற்றது. இவற்றின்மூலம் 1,440 கைவினைஞர்கள் பயன் பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாடு முழுவதும் கதர் தொழில் மையங்களில் பயிற்சி பெற்ற, 16,377 பேருக்கு கருவிகள், இயந்திர தொகுப்புகள் வழங்கப்பட்டது. 500 பேருக்கு வழங்கல்
சென்னை மண்டல அளவில் இந்நிகழ்ச்சி திருப்பூர் வீரபாண்டியில் உள்ள சர்வோதய சங்க வித்யாலயா வளாகத்தில் நடைபெற்றது. மாநில இயக்குநர் சுரேஷ் முன்னிலை வகித்தார். சர்வோதய சங்க செயலாளர் சரவணன், கோவை மண்டல உதவி இயக்குநர் சித்தார்தன் பங்கேற்றனர்.இதில், மண் பாண்ட உற்பத்தி கருவி, மரவேலை கருவிகள், எலக்ட்ரீஷியன் டூல் கிட், பனை, வாழை சார்ந்த பொருள் உற்பத்தி கருவிகள், காலணிகள் பழுதுபார்ப்பு மற்றும் காலணி உற்பத்தி கருவிகள் உள்ளிட்டவை, 500 பேருக்கு வழங்கப்பட்டன. அதன்பின், வீரபாண்டி கிளை சர்வோதய சங்க விரிவுபடுத்தப்பட்ட விற்பனை மையத்தின் திறப்பு விழாவும் நடைபெற்றது.