மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்தித்து நெகிழ்ச்சி
04-Sep-2024
பல்லடம் : சோமனுார் அருகே 'என்கவுன்டர்' பயத்தில், போலீசாரிடம் தப்புவதற்காக, பள்ளத்தில் குதித்தபோது, கொலை வழக்கு கைதிகள் இருவரது கால் முறிந்ததாக கூறப்படுகிறது. இரு கைதிகளிடமும் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.கடந்த, 2021ல், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லுாரி மாணவன் அக்னிராஜ், 19 என்பவரை, வினோத் கண்ணன் என்பவரது கூட்டாளிகள் வெட்டிக் கொலை செய்தனர். பழிக்கு பழியாக, அக்னிராஜ் ஆதரவாளர்கள், அக்னிராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை தீர்த்துக்கட்டினர்.தொடர்ந்து, கடந்த ஆக., 8ம் தேதி, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, கரையாம்புதுாரில், வினோத் கண்ணனை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் பல்லடம் போலீசார், 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதானவர்களில் தங்கராஜ், 38; ராஜேஷ், 40 ஆகியோரை, போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.கோவை மாவட்டம், சோமனுார் அருகே, கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை, பயன்பாடற்ற கல்குவாரி ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாக கைதிகள் தெரிவித்தனர். போலீசார் அவர்களை நேற்றுமுன்தினம் அங்கு அழைத்துச் சென்ற போது, என்கவுன்டர் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில், கைதிகள் இருவரும் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, பள்ளத்தில் குதித்த தங்கராஜின் வலது கால்; ராஜேஷின் இடது கால் முறிந்தது. இதையடுத்து, இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டனர். அப்போது, பல்லடம் மாஜிஸ்திரேட் சித்ரா, அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து, கைதிகள் இருவரிடமும் அரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, இருவரும், போலீஸ் பாதுகாப்புடன் மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
04-Sep-2024