உற்பத்திப்பொருள் சந்தை; புதிய திட்டமிடல் வேண்டும்
திருப்பூர்; வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில், கண்காணிப்பு குழு அமைத்து, வழிகாட்டுதல் வழங்கப் படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 37 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.உழவர் உற்பத்தி நிறுவனங்களில், எட்டு நிறுவனங்கள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலமாகவும், 11 நிறுவனங்கள், 'நபார்டு' வங்கி மூலமாகவும், ஆறு நிறுவனங்கள் 'நேபட்' மூலமாகவும், பிற சங்கங்கள் சுயமாகவும் இயங்கி வருகின்றன.உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில்,''ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும், தங்களது செயல்பாடுகளை மேம்படுத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். உற்பத்தி பொருட்களை, உழவர் சந்தை உள்ளிட்ட சந்தைகளில், சந்தைப்படுத்த புதிய திட்டம் உருவாக்க வேண்டும்,'' என்றார்.வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) வெங்கடாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் துர்கபிரசாத், நபார்டு வங்கி மேலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.