ரிசர்வ் சைட் மீட்க தர்ணா போராட்டம்
திருப்பூர்: திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன், கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு, கலெக்டர் அலுவலக வளாக போர்டிகோவில், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்; அதன்பின், குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் சரவணன் கூறியிருப்பதாவது: பல்லடம் தாலுகா, கரைப்புதுார் கிராமம், ஸ்ரீநகரில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான 80 சென்ட் ரிசர்வ் சைட் இடத்தை ஆக்கிரமித்து, தனியார் கட்டுமானங்கள் கட்டி வருகின்றனர். இதுதொடர்பாக பல்லடம் பி.டி.ஓ.,விடம் தொடர்ந்து 15 மனுக்கள் அளித்தும், எந்த பயனுமில்லை. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அந்த நிலத்தின் பாதுகாப்பை பி.டி.ஓ., உறுதிப்படுத்த வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் கட்டுமானம் அல்லது வேறு எவ்வித ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், அவற்றை உடனடியாக அகற்றவேண்டும் எனவும், தேவைப்பட்டால் போலீஸ் பாதுகாப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவுப்படி, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரிசர்வ் சைட் இடத்தை மீட்கவேண்டும். அப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கவேண்டும். பல்லடம் பி.டி.ஓ., மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.