உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு; மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு; மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்

உடுமலை; மாணவர்களிடம் ஏற்படும் வன்முறை எண்ணங்களை கட்டுப்படுத்த, உளவியல் ஆலோசனை திட்டத்தை மீண்டும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டுமென, வலியுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிக்குழந்தைகளிடம், நல்ல பழக்கங்களை மேம்படுத்தவும், தவறான வழிகளில் செல்வதை தடுக்கவும், வன்முறை எண்ணங்களை கட்டுப்படுத்தவும், நடமாடும் ஆலோசனை மையத்திட்டம், பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.வளர்இளம் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு, உளவியல் நிபுணர்கள், ஆலோசனை வழங்கினர். மாணவர்களிடம் நல்லமுறையில் மாற்றம் இருந்ததால், பள்ளிகளிலும் இத்திட்டம் வரவேற்பை பெற்றது.ஆலோசகர்கள் மாணவர்களிடம் கலந்துரையாடி, உளவியல் பிரச்னைகளை அறிந்து கொண்டு அதற்கான தீர்வுகளை ஆலோசகர்கள் வழங்கினர்.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், ஆலோசகர்கள் ஆர்வமெடுத்து அந்தந்த காலகட்டங்களில் நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்தும், ஆலோசனைகள் வகுப்புகள் எடுக்கப்பட்டது.கொரோனா நேரத்தில் பள்ளிகளில் இத்திட்டம் முடங்கியதால், மீண்டும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் தற்போது, சமூகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களில், வளர்இளம் பருவத்தினர் ஈடுபடுவதை கட்டுப்படுத்த, இத்திட்டம் மிகவும் அவசியமாகியுள்ளது.இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தி பள்ளிகளில் செயல்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:அவ்வப்போது நடக்கும் பல்வேறு குற்றசம்பவங்களை மையப்படுத்தி, அதற்கான தீர்வாகவும் உளவியல் ஆலோசனைகள் வழங்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.உளவியல் ஆலோசனை வகுப்புகளின் போது, சட்டப்பிரிவுகள் மற்றும் குற்றசம்பவங்களால் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்க, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் அல்லது தன்னார்வலர்கள் வாயிலாக, அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் வகுப்புகள் இருக்க வேண்டும்.திட்டத்தில், வளர் இளம் பருவத்தினர் மட்டுமின்றி, ஆறாம் வகுப்பு முதலே அனைத்து மாணவர்களுக்கும் உளவியல் சார்ந்த ஆலோசனை தேவையாக உள்ளது.இன்றைய காலத்தில், மொபைல் போன்களால் தான் பலரும் தவறான வழிகளில் சிக்கிக்கொள்கின்றனர். மாணவர்களுக்கு, இதுபோன்ற உளவியல் ரீதியான வகுப்புகள் கட்டாய தேவையாக உள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி