பாதையை சீரமைக்கலாமே; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அனுப்பர்பாளையம்; -திருப்பூர் மாநகராட்சி, 25 வது வார்டு, வஞ்சிபாளையம் ரோடு, ரயில்வே பாதைக்கு மறுபுறம் 400 க்கு மேற்பட்ட வீடுகளும். சாய ஆலைகளும் செயல்பட்டு வருகிறது.இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சாய ஆலை நிறுவனத்தினர் ரயில்வே பாதைக்கு மறுபுறம் செல்ல ரயில்வே சுரங்க பாதையை பயன்படுத்தி வருகின்றனர். சுரங்க பாதையில் குடிநீர் குழாய் கசிவால் தண்ணீர் தேங்கி பாதை குண்டும் குழியுமாக உள்ளது.இதனால், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் ரயில்வே சுரங்க பாதையை கடந்து செல்ல பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அப்பகுதியினர் கூறியதாவது: இப்பகுதியில் அதிகளவில் வீடுகள் மற்றும் சாய ஆலை நிறுவனங்கள் உள்ளன. இதனால், வாகன போக்குவரத்து அதிகம். ரயில்வே சுரங்க பாலம் மோசமாக இருப்பதோடு தண்ணீர் தேங்கி இருப்பதால், நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பள்ளி, வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இரவில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் தேங்குவதை நிறுத்தி, ரயில்வே துறையின் அனுமதியோடு குண்டும், குழியுமான பாதையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.