சாலை வசதி வேண்டும்; பொதுமக்கள் போராட்டம்
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, ஒன்றாவது வார்டு, குமரன் காலனி ஆறாவது வீதியில், சாலை வசதி இல்லை. சாக்கடை கால்வாய் வசதியும் அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் ரோட்டில் தேங்கி, சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறுவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை. பொதுமக்களும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதி பொதுமக்கள் முதல் மண்டல அலுவலகத்தில் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மாலை குமரன் காலனி பிரதான வீதியில் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின், அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர் என யாரும் வராததால், அடுத்த கட்ட போராட்டமாக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட, முடிவு செய்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.