டயாபர் தயாரிப்பு ஆலை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
திருப்பூர் : வே.வாவிபாளையத்தில், 'டயாபர்' உற்பத்தி நிறுவனம் அமைக்க, மக்கள், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம், மனு அளித்தனர்.இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:பொங்கலுார் ஒன்றியம் வே. வாவிபாளையம் சுற்றுப்பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகம் நடைபெறுகிறது.பி.ஏ.பி., பிரதான கால்வாய், இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்நிலையில், வேலாத்தாள் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில், டயாபர் நிறுவனம் அமைக்க கூடாது என, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.நிறுவனம் அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்த வேளாண் இணை இயக்குனர், விவசாயம் லாபகரமாக இல்லாததால் விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என அறிக்கை அளித்துள்ளார்.நில பயன்பாட்டை, விவசாயத்திலிருந்து, விவசாயம் சாராத நோக்கங்களுக்கு மாற்றுவது, திட்டமிடப்படாத பகுதி விதிகள் 2017க்கு எதிரானது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இயக்க ஆணை பெறுவதற்கு முன்னரே, வேளாண் நிலத்தில் தொழிற்சாலை கட்டுமான பணிகளை துவக்கி விட்டனர்.வே. வாவிபாளையம் ஊராட்சி மக்கள் மற்றும் பொங்கலுார் ஒன்றிய பகுதிகளில், தொழிற்சாலை அமைப்பது தொடர்பான குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை.பொங்கலுார் ஒன்றிய பகுதி மக்கள், அமைதியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். 'டயாபர்' தொழிற்சாலை அமையும் பட்சத்தில், மக்களின் பொது சுகாதாரம், வேளாண்மைக்கு ஆபத்து ஏற்படும் என்று, 2024, நவ., 23ல் நடந்த கிராம சபா கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஊராட்சி நிர்வாகம், பொதுமக்களின் கருத்து மற்றும் ஆட்சேபணையை மாவட்ட நிர்வாகம்கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.