விரைவான தீர்வு; எதிர்நோக்கும் மக்கள்
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று நடந்த குறைகேட்புக்கூட்டத்தில் மொத்தம் 352 மனுக்கள் குவிந்தன. மனுக்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் பெற்றார்.இந்து இறை தொண்டாளர்கள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் சின்னதுரை மற்றும் உறுப்பினர்கள்:கிராம கோவில் பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள விதிமுறைகளை அரசு தளர்த்த வேண்டும். ஓய்வூதிய ஆண்டு வருமான உச்சவரம்பை, 72 ஆயிரம் ரூபாயிலிருந்து, 2 லட்சமாக உயர்த்த வேண்டும். வழிபாட்டு தலங்களில், கர்ப்பிணி, கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். ஹிந்து கடவுள்கள், வழிபாடுகளை இழிவுபடுத்தி பேசுவோர் மீது, பாரபட்சமின்றி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.முதியாநெரிச்சல் பகுதி மக்கள்:திருப்பூர் தெற்கு தாலுகா, கண்டியன் கோவிலில், பி.ஏ.பி., வாய்க்கால் வழியாக முதியாநெரிச்சல் செல்லும் ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல், மிக குறுகலாக தார்சாலை போடப்பட்டுவருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, தரமான முறையில் ரோடு போடவேண்டும்.கவுண்டம்பாளையம் பகுதி மக்கள்:திருப்பூர் தெற்கு தாலுகா, பெருந்தொழுவு, கவுண்டம்பாளையத்தில், 2019ல், 30 நபர்களுக்கு அவிநாசிபாளையம் கிராமம், புல எண்: 341 ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கிய இடத்தில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் உலர் களம் கட்டப்பட்டுள்ளதாக தாசில்தார் பதில் அளித்துள்ளார். அரசே இப்படி, பட்டாவை மட்டும் கொடுத்துவிட்டு, இடம் வழங்காமல் ஏமாற்றலாமா? இடம் வழங்க வேண்டும்.முட்டியங்கிணறு காலனி மக்கள்: வங்கி கடன் பெற்று, கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ஏதுவாக, பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஈட்டி வீரம்பாளையம் ஸ்ரீ சக்ரா நகர் பொதுமக்கள்: சாக்கடை கால்வாய் வசதி செய்துதர வேண்டும்.----கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த இந்து இறைத்தொண்டாளர் சங்கத்தினர்; ஈட்டிவீரம்பாளையம் ஸ்ரீசக்ரா நகர் பகுதி மக்கள்; முட்டியங்கிணறு காலனி மக்கள்; கண்டியன்கோவில் பகுதி விவசாயிகள்.
மகன், மருமகள் மீது புகார்
உடுமலையை சேர்ந்த 75 வயது மூதாட்டி, வீட்டிலிருந்து வெளியேற்றிய தனது மகன் மற்றும் மருமகள் எதிராக, குறைகேட்பு கூட்டத்தில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் நேற்று அளித்த மனு:எனது கணவர், 28 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அப்போது முதலே நான் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். அரசு பள்ளி ஆசிரியர்களான மகனும், மருமகளும், கணியூரில் உள்ள அவர்களது வீட்டுக்கு என்னை அழைத்துச்சென்றனர். அதேநேரம், எங்கள் பூர்வீக வீடு மற்றும் 5 பவுன் நகையை எனது சம்மதம் இல்லாமல் விற்றுவிட்டனர். மருத்துவ செலவுகளுக்கும் உதவுவதில்லை. குடிப்பழக்கத்துக்கு அடிமையான எனது மகனை, மருமகள், மதுபானமீட்பு மையத்துக்கு அனுப்பி வைத்து விட்டார். எனது உணவு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு உதவியின்றி பரிதவித்து வருகிறேன். எனது மகன் மற்றும் மருமகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, எனது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவேண்டும்.
மறுஏலம் விடும் மர்மம் என்ன?
திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், குறைகேட்பு கூட்டத்தில் நேற்று அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:பெருமாநல்லுார் ஊராட்சியில், பொது கழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஆகியவை, கடந்த ஜன. 27 ல் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில், ஏலம் எடுத்தவர்களும், அதிகாரிகளும் கூட்டுசேர்ந்து, மீண்டும் குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கும் நோக்கில், வரும் 13 ம் தேதி, மறு ஏலம் அறிவித்துள்ளனர். இதனால், பெருமாநல்லுார் ஊராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தும்நோக்கில் செயல்படும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜன. 27 ம் தேதி நடந்த ஏலம் அடிப்படையில் தொகை பெறப்பட வேண்டும். மறு ஏல நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும்.