தினமலர் பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக். மாணவர்கள் அசத்தல்
உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி - வினா போட்டி உடுமலை பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற் காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, உடுமலை பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 114 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 'சி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஏழாம் வகுப்பு மாணவன் ஹரிபிரசாத், எட்டாம் வகுப்பு மாணவி சூரியபாலா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் நடராஜன், துணை முதல்வர் ஜோதிலட்சுமி, ஒருங்கிணைப்பாளர்கள் மணிமேகலை, விஜயலட்சுமி, ஆசிரியர்கள் ஜனார்த்தன், மணிகண்டன் ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். பொது அறிவு பெட்டகம்! பள்ளி முதல்வர் நடராஜன் கூறுகையில், ''மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, 'தினமலர் பட்டம்' இதழ் உதவுகிறது. அறிவியல் சார்ந்த ஆர்வத்தை துாண்டி, மாணவ, மாணவியரின் ஆக்கத்திறனை அதாவது விரிசிந்தனையை ஊக்குவிக்கிறது. தமிழ் தொடர்பாக வரும், 'வார்த்தைகளை கண்டுபிடித்தல்,' என்ற பகுதியானது மாணவர்களின் சொற்கள் உருவாக்கத்திறனை துாண்டுகிறது. கணிதத்திலுள்ள புதிர் கணக்குகள் மாணவர்களை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வழிவகுக்குகிறது. விளையாட்டு தொடர்பான வினாக்கள், பொது அறிவு தொடர்பான வினாக்களை படிப்பதால், மாணவர்கள், பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்டுகிறது. இந்த இதழ், மாணவர்களுக்கு பொது அறிவுப் பெட்டகமாக விளங்குகிறது,'' என்றார்.
வாசிப்பை நேசிக்க உதவுகிறது
மாணவி சூரியபாலா: புதிய, புதிய தகவல்களை தெரிந்து கொள்ள, 'பட்டம்' இதழ் உதவியாக இருக்கிறது. வாசிப்பதற்கு எளிமையாகவும், ஆர்வமாகவும் உள்ளது. எழுத்துத்தேர்வு, வினாடி-வினா போட்டி போன்றவை மாணவர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது. 'வாசிப்பை நேசி' என்ற சொல்லாக்கத்திற்கு உதவியாக, 'பட்டம்' இதழ் மிகவும் உதவியாக உள்ளது. மாணவன் ஹரிபிரசாத்: 'பட்டம்' இதழ் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நாள்தோறும் படிப்பதால், எங்களின் வாசிப்புத்திறன் மேம்பாடு அடைந்துள்ளது. மேலும், பொது அறிவு சார்ந்த அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ள பட்டம் இதழ் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், உதவியாகவும் இருக்கிறது.