ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு; பிரச்னைகள் தீர எதிர்பார்ப்பு
உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு செய்துள்ள நிலையில், அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதையில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று 2015ல், இந்த ஸ்டேஷன் வழியாக ரயில் போக்குவரத்து துவங்கியது. இருப்பினும், அடிப்படை வசதிகள் போதியளவு மேம்படுத்தப்படாமல் உள்ளது. குறிப்பாக, பயணியர் நிழற்கூரை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் சுகாதாரம் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் நிரந்தரமாக உள்ளது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த, 2ம் தேதி செய்தி வெளியானது. இந்நிலையில், மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ்மீனா உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், ஆய்வு செய்தார். அவரிடம், ரயில்வே பயணிகள் நலச்சங்கம் மற்றும் பயணியர் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, உடுமலை, பழநி, திண்டுக்கல் வழியாக இயங்கிய கோவை - தாம்பரம், கோவை - திண்டுக்கல் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள காலியிடத்தில், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அனுமதி வழங்க வேண்டும்; அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்தார். இதனால், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணியரிடையே அதிகரித்துள்ளது.