ரயில் நிலைய மேம்பாட்டு பணி ஆகஸ்ட் மாதத்தில் நிறைவுறும்
திருப்பூர்; ''திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மத்திய அரசின் 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள், ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவுறும்'' என்று அதிகாரிகள் கூறினர்.மத்திய அரசின் 'அம்ரூத் பாரத்' திட்டத்தில், ரயில்வே ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், 22 கோடி ரூபாய் மதிப்பிலான, நுழைவாயில் விஸ்தரிப்பு, பிளார்ட்பார்ம் விரிவாக்கம், வடபுறம் புதிய நுழைவாயில் அமைத்தல், வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பூர் எம்.பி., சுப்பராயன், நேற்று ரயில்வே பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் ரயில்வே அதிகாரிகள், ஒப்பந்த நிறுவன அலுவலர்கள் கூட்டாய்வு நடத்தினர்.நகரும் படிக்கட்டுகள், லிப்ட், பிளார்ட்பார்ம், வடபுறம் அமைக்கப்படும் நுழைவாயில், 'டூ வீலர்' ஸ்டாண்ட் போன்ற பணிகளை எம்.பி., ஆய்வு செய்தார். 'மரங்களை வெட்டாதீர்கள்'
சேலத்தில் இன்று நடைபெற உள்ள மண்டல அளவிலான கூட்டத்தில், பணிகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில், ஆய்வு செய்துள்ளார்.இயன்றவரை, மரங்களை வெட்டாமல் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திய எம்.பி., விரைவாக பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார். 70 சதவீத பணி நிறைவு
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணி, 22 கோடி ரூபாயில் துவங்கியது; தற்போது சில பணிகளுடன் சேர்த்து, 32 கோடி ரூபாய்க்கு திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.அனைத்து பணிகளும், மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தில் நடந்து வருகின்றன.இதுவரை, 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஆக., மாதத்துக்குள் முதல்கட்ட பணிகள் நிறைவடையும். வடபுறம், 56 கார்கள் நிற்கும் ஸ்டாண்ட் மற்றும் 2,200 சதுர அடியில் 'டூ வீலர் ஸ்டாண்ட்'கள் கட்டப்படும்.ஸ்டேஷனின் வடபுற நுழைவாயிலில், போர்டிகோ, 40 அடி அகலத்தில் இருவழிப்பாதையும் அமைக்கப்படும்.ரயில்வே பணியாளர்களுக்கு தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், 12 குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும். இப்பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவுறும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.