பயனில்லாத போர்வெல்களில் மழைநீர் சேகரிப்பு: அரசுக்கு வலியுறுத்தல்
உடுமலை; குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட போர்வெல்களில், மழை நீரை சேகரிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியத்தில் நிலத்தடி நீர் மட்டத்துக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் ஆதாரமாக உள்ளன. இந்த மழைக்காலத்தில், குளம் மற்றும் இதர கட்டமைப்புகள் வாயிலாக மழை நீரை சேகரித்தால், நிலத்தடி நீர்மட்டம் சரியாமல் பாதுகாக்கலாம்.ஆனால், மழை நீர் சேகரிப்புக்கு தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளில், தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு, மேற்கொள்வதில்லை.சில ஆண்டுகளுக்கு முன், சோதனை முயற்சியாக, கிராமங்களில், பயன்பாடு இல்லாமல், கைவிடப்பட்ட போர்வெல்களில் மழை நீரை சேகரிக்க திட்டமிடப்பட்டது.முதற்கட்டமாக, 7 போர்வெல்களில், சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தி, குறிப்பிட்ட ஆழத்திற்கு, மணல் கொட்டி, மழை நீர் முறையாக அப்பகுதிக்கு செல்ல கான்கிரீட் தளமும் ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, பயனில்லாமல், காட்சிப்பொருளாக, 95க்கும் அதிகமான போர்வெல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கும், மழை நீர் சேகரிக்க, பணிகளை மேற்கொள்ள, கிராம மக்கள் வலியுறுத்தினர்.ஆனால், பணிகள் கண்டுகொள்ளப்படவில்லை. அரசு நிதியில், கிராமந்தோறும் அமைக்கப்பட்ட போர்வெல்களை பயனுள்ளதாக மாற்றும் திட்டத்துக்கு, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.தற்போது, குடிமங்கலம் ஒன்றியத்துக்கு, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது; எனவே, கிராமங்களில், வீணாக இருக்கும் போர்வெல்களில், உடனடியாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த ஒன்றிய நிர்வாகத்தை, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.