குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்; ஊராட்சி அலுவலகம் முற்றுகை
பல்லடம்; பல்லடம் அடுத்த, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிம்மபுரி பகுதி பொதுமக்கள், நேற்று, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அவர்கள் கூறியதாவது:நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சிம்மபுரி பகுதியில் உள்ளன. ரோடுகள் அனைத்தும் கரைந்து விட்டன. மழைநீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதி இல்லை.மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால், குடியிருப்புகள், சுற்றுச்சுவர் ஆகியவை சேதமடைந்து வருகின்றன. இடிந்து விழும் அபாயமும் உள்ளது. மழைநீர் செல்ல வழி இல்லாததால், பல்வேறு இடங்களில், கால்வாய் போன்று குழி வெட்டி தற்காலிக ஏற்பாடு செய்துள்ளோம்.மழைநீர் வடிந்து செல்லவும், ரோடுகளை சீரமைக்கவும் உடனடி நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர்கள் கூறினர்.'பாதிப்புகளை நேரில் வந்து பாருங்கள்' என, ஊராட்சி தலைவர் பாரதி சின்னப்பனையும் குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறினார்.