ரேஷன் குறைகேட்பு கூட்டம் 9 தாலுகாவிலும் 14ல் நடக்கிறது
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், வரும், 14ம் தேதி, ரேஷன் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.அன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, அந்தந்த குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி ஆர்.ஐ.,க்கள், பொதுமக்களிடமிருந்து ரேஷன் சார்ந்த மனுக்களை பெறுகின்றனர். அவிநாசியில், ராக்கியாபாளையம், தாராபுரத்தில் செம்மே கவுண்டன்பாளையம், காங்கயத்தில் வரதப்பம்பாளையம், மடத்துக்குளத்தில் வேடப்பட்டி, பல்லடத்தில் அனுப்பட்டி, திருப்பூர் வடக்கு தாலுகாவில் செட்டிபாளையம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் கண்டியன் கோவில், உடுமலையில் ராமச்சந்திரபுரம், ஊத்துக்குளியில் நடுப்பட்டி ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.பொதுமக்கள், ரேஷன் கார்டுடன் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, மொபைல் போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு கோரும் மனுக்களை பதிவு செய்தல் தொடர்பான கோரிக்கைகளையும் அளிக்கலாம் என, கலெக்டர் அறிவித்துள்ளார்.