தினமும் செய்தித்தாள் வாசிக்கணும்! எழுத்தறிவு தினத்தில் மாணவியருக்கு அட்வைஸ்
திருப்பூர்; சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, மாணவியர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், 2,000 மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து திருக்குறள் வாசித்தனர்; இதை, சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர். சர்வதேச எழுத்தறிவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் பயிலும், 2,000 மாணவியர், பேராசிரியர், அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவரும், திருக்குறள் வாசித்தனர். கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் சுதாதேவி, வரவேற்றார். கல்லுாரி அரங்கில் குழுமிய அனைவரும், திருக்குறளில் கல்வி அதிகாரத்தில் உள்ள அனைத்து திருக்குறள்களையும் வாசித்து, அதன் அர்த்தம் உணர்ந்தனர். முன்னதாக, கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்து பேசுகையில், ''வாசிப்பு பழக்கம் என்பது, அறிவாற்றல், சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். தற்போது மாணவியர், மொபைல் போன்கள் வாயிலாக தான் அதிகம் வாசிக்கின்றனர். இதனால், புத்தகம், செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. வாசிப்பு திறனை ஊக்குவித்து, மேம்படுத்தும் நோக்கில் தான், இந்த வாசிப்பு நிகழ்வை நடத்துகிறோம். இந்த பழக்கத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தினமும், புத்தகம், செய்தித்தாள் வாசிக்க வேண்டும்,'' என்றார். கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் கூறுகையில், ''தினமும் செய்தித்தாள் வாசித்தால், அனைத்து விதமான தகவல்களை பெறலாம். போட்டித்தேர்வு எழுதவும் அது கைகொடுக்கும். வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியை, சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளோம்,'' என்றார்.