உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செம்மையாகிறது வாக்காளர் பட்டியல்; வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்குமா?

செம்மையாகிறது வாக்காளர் பட்டியல்; வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்குமா?

திருப்பூர் : சுருக்கமுறை திருத்தத்தில், இறந்த, இரட்டை பதிவு வாக்காளரை கண்டறிந்து நீக்குவதில், திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் முனைப்புக்காட்டி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் நவ., 28 வரை சுருக்க முறை திருத்தம் நடக்கிறது. பெயர் சேர்த்தல், நீக்கம் உள்பட அனைத்து வகைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்திலுள்ள 2,536 ஓட்டுச்சாவடிகளிலும், படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பிக்க வேண்டும். https://voters.eci.gov.inஎன்கிற இணையதளம் வாயிலாகவும்; Voter Helpline செயலி மூலமாகவும் ஆன்லைனிலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம்.சுருக்கமுறை திருத்தத்தில், 18 வயதான இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல், இறந்தவர் பெயர், இரட்டை பதிவு வாக்காளரை களைவதும் அவசியமாகிறது. இறந்த வாக்காளர்கள் நீக்கப்படாதது; இரட்டை பதிவு வாக்காளர் நீடிப்பதே, ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப்பதிவு விகிதம் சரிய முக்கிய காரணிகளாக உள்ளன.மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர் உள்ளனர். இம்மாதம் 23ம் தேதி நிலவரப்படி, 23 லட்சத்து ஒரு ஆயிரத்து 932 வாக்காளர் விவரம் சரிபார்க்கப்பட்டுள்ளது.சரிபார்ப்பில், 16,644 இறந்த வாக்காளர் கண்டறியப்பட்டுள்ளனர். எண்ணிக்கையில் அதிகபட்சமாக தாராபுரத்தில் - 3,086, அவிநாசி - 2,942, காங்கயம் - 2,543, பல்லடம் - 2,485, திருப்பூர் வடக்கு - 2,106 என இறந்த வாக்காளர் கண்டறியப்பட்டுள்ளனர். திருப்பூர் தெற்கு - 1,572, உடுமலை - 1,269, மடத்துக்குளம் - 641 இறந்த வாக்காளர்கள் பட்டியலில் 'உயிர் வாழ்ந்தது' தெரிய வந்துள்ளது.மாவட்டம் முழுவதும் 37,765 வாக்காளர்கள், முகவரியில் இல்லாததும், 13,962 வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.அதிகபட்சமாக திருப்பூர் தெற்கு தொகுதியில், 3,293 பேர் இடம் பெயர்ந்தது சென்றதும், 16,445 வாக்காளர் முகவரியில் இல்லாததும் தெரிய வந்துள்ளது. திருப்பூர் வடக்கில், 5,913 பேர் முகவரியில் இல்லை. 2,508 பேர் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். மாவட்டத்தில் அதிக வாக்காளரை கொண்ட பல்லடம் சட்டசபை தொகுதியில், 5,159 வாக்காளர் முகவரியில் இல்லை; 2198 வாக்காளர் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.வாக்காளர் பட்டியல் செம்மையாக்கப்பட்டால், வரும் தேர்தல்களில், வாக்குப்பதிவு சதவீதம் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

'இரட்டைப்பதிவு' வாக்காளருக்கு கடிதம்

சுருக்கமுறை திருத்தத்தில், 16,644 இறந்த வாக்காளர்களின் குடும்பத்தினரிடம் படிவம் - 7 பூர்த்தி செய்து பெற்று, பெயர் நீக்கம் செய்யப்படும்.முகவரியில் இல்லாத வாக்காளர்களுக்கு, தபால் அனுப்பப்படும். உரிய பதில் இல்லாவிட்டால், பி.எல்.ஓ.,க்கள் கள ஆய்வு செய்து, வாக்காளர் குறிப்பிட்ட முகவரியில் இல்லாததை உறுதி செய்வர். அதனடிப்படையில், அந்த வாக்காளர் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்படும். மாவட்டம் முழுவதும் எட்டு தொகுதிகளில், இரட்டை பதிவு தொடர்பாக 1.96 லட்சம் வாக்காளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பதில் அடிப்படையில், இரட்டை பதிவு வாக்காளரை கண்டறிந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SUBBU,MADURAI
நவ 01, 2024 07:26

வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுகவின் அல்லக்கையாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் போல் செயல்பட்டு வரும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருப்பவரான சத்தியப்பிரதா சாஹூவை மத்திய தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கண்டிப்பாக வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் அப்படி அவரை மாற்றா விட்டால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒழுங்காகவும் நேர்மையாகவும் நடக்க வாய்ப்பில்லை!


சமீபத்திய செய்தி