உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாப்பை மாற்றி அமையுங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்

பஸ் ஸ்டாப்பை மாற்றி அமையுங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்

உடுமலை: உடுமலை தளி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தாலுகா அலுவலக பஸ் ஸ்டாப்பை மாற்றுவதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலையிலிருந்து மூணார், திருமூர்த்திமலை செல்வோர் மற்றும் ஊரக பகுதிகளுக்கு செல்வோருக்கு, தளிரோடு பிரதான வழித்தடமாக உள்ளது.சுற்றுலா பயணியர், கிராமப்பகுதிகளுக்கு செல்வோர், பள்ளி மாணவர்கள், பணியாளர்கள் என பல ஆயிரக்கணக்கில் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக சென்று வருகின்றனர்.தளி ரோடு சிக்னலில் துவங்கி, மேம்பாலம் வரையுள்ள பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே ஒரு பஸ் ஸ்டாப் உள்ளது. அதேபோல், இந்த பஸ் ஸ்டாப் நேர் எதிரில், முதற்கிளை நுாலகம் முன்புறம், அப்பகுதியிலிருந்து வருவோருக்கான பஸ் ஸ்டாப் உள்ளது.இவ்வாறு இருபகுதிகளிலும், ஒரே இடத்தில் பஸ் ஸ்டாப் இருப்பது, தற்போது போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.இருபகுதிகளிலும், ஒரே நேரத்தில் பஸ் நிறுத்தப்படும்போது, அதை தொடர்ந்து வரும் வாகனங்கள் வரிசை கட்டி காத்திருக்க வேண்டி வருகிறது. இவ்விரண்டு பகுதிகளிலும் பஸ் ஸ்டாப் இருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், தளி ரோடு சிக்னல் வரை வாகனங்கள் நின்று விடுகின்றன.ஏதேனும் ஒரு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பை, மாற்றி அமைப்பது மட்டுமே இப்பிரச்னைக்கான தீர்வாக உள்ளது.மேம்பாலத்தின் அருகில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவியர் பஸ் பயணம் செய்வதற்கு, தாலுகா அலுவலக ஸ்டாப் வரை வர வேண்டியுள்ளது.நகராட்சி நிர்வாகம் முன்பு, பஸ் ஸ்டாப் அமைப்பதற்கான இடவசதி உள்ளது. மேலும், இப்பகுதியில் பஸ் ஸ்டாப் அமைப்பதற்கு, பள்ளி மாணவியரின் பெற்றோரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தாலுகா அலுவலக பஸ் ஸ்டாப்பை மாற்ற வேண்டுமென, நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை