பஸ்சில் செல்லும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
உடுமலை; பஸ்சில் செல்லும் பள்ளி மாணவர்கள், பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய, பள்ளிகளில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, தொலைதுாரத்திலிருந்து வரும் குழந்தைகள் பஸ்சில் பயணம் செய்கின்றனர். மேல்நிலை வகுப்புகளுக்கு தாமதமாகவே சைக்கிள்கள் வழங்கப்படுவதால், பெரும்பான்மையான மாணவர்களுக்கு, பஸ் பயணம் தான் பள்ளிக்கு செல்லும் வழியாக உள்ளது. மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு, பரவலாக பஸ்கள் இல்லாதது, நீண்ட இடைவெளியில் பஸ்கள் இயக்கப்படுவது போன்ற பிரச்னைகளால், காலை, மாலை நேரங்களில் அடித்துப்பிடித்து பஸ்சை பிடிக்கின்றனர். சில நேரங்களில் தள்ளுமுள்ளுக்கு ஆளாகும் குழந்தைகள், கீழே விழுவதும் நிகழ்கிறது. பல மாணவர்கள், ஓடும் பஸ்சை பிடிக்க துரத்திச்செல்லும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். கல்வியாளர்கள் கூறியதாவது: பஸ்சில் செல்லும் மாணவர்கள், ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டில் நின்று தொங்கிய நிலையில் வருகின்றனர். கூட்ட நெரிசலான நேரங்களில், பள்ளிக்கு தாமதமானாலும் பராவயில்லை என காத்திருந்து செல்வதற்கு, பள்ளிகள் அனுமதி வழங்குவது அல்லது அந்த வழிதடங்களில் கூடுதல் பஸ் இயக்குவதற்கும், நடவடிக்கை எடுப்பதும் அவசியம். மாணவர்கள் பஸ்சுக்கு காத்திருப்பதை, பள்ளி நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.