பள்ளி நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க கோரிக்கை
உடுமலை: உடுமலை ஒன்றியம் ஆண்டியகவுண்டனுாரில், அரசு துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்குள்ள குழந்தைகள், அடுத்தடுத்த நிலை கல்விக்கு அருகிலுள்ள கிராமப்பள்ளிகளுக்குதான் செல்ல வேண்டியுள்ளது.இங்குள்ள பெரும்பான்மையான மாணவர்கள், மலையாண்டிபட்டணம் உயர்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படிக்கின்றனர். கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களும், பள்ளி நேரத்தில் இயக்கப்படும் பஸ்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.பள்ளி நேரத்தில், ஆண்டியகவுண்டனுார் கிராமம் வழியாக காலை, 8:00 மணிக்கு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், பணிக்கு செல்வோர், கல்லுாரி மாணவர்கள் என பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆண்டியகவுண்டனுாரிலிருந்து செல்லும் மாணவர்கள் வேறு வழியில்லாமல், கூட்ட நெரிசலில் சிக்கி செல்கின்றனர்.கூட்ட நெரிசலால், பல குழந்தைகள் விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர். மாணவர்களை, தனியார் வாகனங்களில் அனுப்பும் அளவுக்கு, பொருளாதார நிலை இல்லை. இதனால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், போக்குவரத்து கழகத்தின் சார்பில் பள்ளி நேரத்தில், இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.