உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் மேடான கால்வாய்களை துார்வாரணும்! மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

மண் மேடான கால்வாய்களை துார்வாரணும்! மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

உடுமலை; பாசன காலம் துவங்கும் முன், துார்வாரப்படாமல், மண் மேடாக மாறியுள்ள வாய்க்கால்களை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், துார்வார வேண்டும் என இரு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், பி.ஏ.பி., பாசனத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மண்டல வாரியாக, கிளை கால்வாய்களுக்கு பிரித்தளிக்கப்படுகிறது.இத்தகைய கிளை கால்வாய்களில் இருந்து, பகிர்மான வாய்க்கால் மற்றும் அரணி வாய்க்கால் எனப்படும் மண் வாய்க்கால்கள் வாயிலாக, தண்ணீரை எடுத்துச்சென்று விவசாயிகள் பாய்ச்சுகின்றனர்.இதில், பிரதான மற்றும் கிளை கால்வாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகிறது.ஆனால், அரணி வாய்க்கால்கள் பெரும்பாலும், மண் வாய்க்கால்களாகவே உள்ளன. கான்கிரீட் அமைக்கப்படாமல், மண் கரையாகவே இந்த வாய்க்கால்கள் இருப்பதால், விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.ஒவ்வொரு மண்டல பாசனத்துக்கும், இரண்டரை ஆண்டு இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியில், மண் வாய்க்கால்கள் மண் மூடி, புதர் மண்டி காணாமல் போய் விடுவது வழக்கம்.எனவே விவசாயிகள் தங்கள் பங்களிப்பு நிதியுடன், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் போது, அவசர கதியில், மண் வாய்க்கால்களை துார்வாருகின்றனர்.இதிலும், நடைமுறை சிக்கல் இருப்பதால், சில ஆண்டுகளுக்கு முன், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அதன்படி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை கொண்டு, மண் வாய்க்கால்களை துார்வார, உத்தரவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில், முக்கிய பாசன ஆதாரமான கால்வாய்கள் துார்வாரப்பட்டதுடன், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கும் வேலை கிடைத்தது.பி.ஏ.பி., விவசாயிகள் கூறியதாவது: இரண்டரை ஆண்டு இடைவெளியில், பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. இதனால், மண் வாய்க்கால்களை தொடர்ச்சியாக பராமரிக்க முடிவதில்லை.பாசன சபைகளிலும் போதிய நிதி ஆதாரம் இல்லாததால், துார்வாரும் பணிகளில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, வரும் நான்காம் மண்டல பாசன காலம் துவங்கும் முன், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக மண் வாய்க்கால்களை துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் பாசன காலத்தில், நீர் விரயம் அதிகரித்து, விளைநிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காது.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை