ரோட்டில் ஆக்கிரமிப்பு: தொடரும் போக்குவரத்து நெரிசல்
உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடுமலையில் பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு போன்ற ரோடுகள் பிரதான ரோடுகளாக உள்ளன. இதில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இதனால், போக்குவரத்து அதிகளவில் காணப்படும். இந்த ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, வாரத்தில் திங்கட்கிழமையன்று சந்தை நாளில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால், வாகன ஓட்டுனர்கள் செல்ல முடியாமல் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பொதுமக்ககள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதுகுறித்து, பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.