மேலும் செய்திகள்
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
19-Dec-2024
உடுமலை; பல்லடத்திலிருந்து போதிய போக்குவரத்து வசதியில்லாத கிராமங்கள் வழியாக, பூளவாடிக்கு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.உடுமலை அருகே பூளவாடியில், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், வாரச்சந்தை அமைந்துள்ளது. தேவைகளுக்காக சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து மக்கள் பூளவாடிக்கு வந்து செல்கின்றனர்.இக்கிராமங்களில் இருந்து பூளவாடிக்கு வர போதிய பஸ் வசதி இல்லை. இது குறித்து தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனு:பல்லடத்திலிருந்து சித்தம்பலம், கேத்தனுார், ஜல்லிபட்டி, மேற்குசடையபாளையம், கருப்பட்டிபாளையம், முத்தையம்பட்டி, பெரியகுமாரபாளையம், முத்துார் பிரிவு வழியாக பூளவாடிக்கு பஸ் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் பஸ் இயக்குவதால், போக்குவரத்து வசதி அதிகமில்லாத பல கிராமங்கள் பயன்பெறும்.மேலும், பெரியகுமாரபாளையம், முத்தையம்பட்டி, நல்லிபாளையம் உட்பட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், எளிதாக பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து செல்வார்கள். பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பூளவாடியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு வந்து செல்வது எளிதாகும்.வட்டார போக்குவரத்து துறை மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து தேவையான 'டிரிப்'களில், பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போல், பல்லடம் மாநில நெடுஞ்சாலையில் திருப்பூருக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும், பூளவாடி பிரிவில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19-Dec-2024