வீடு மறுகட்டமைப்பு ரூ.2.40 லட்சம் ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு
திருப்பூர்,: வீடுகள் மறுகட்டமைப்பு திட்டத்தில், 2.40 லட்சம் ரூபாய் மானியத்தில், பழுதான வீடுகளை சீரமைக்கலாம்.கிராமப்புற மக்களின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில், மத்திய, மாநில அரசு மானியத்துடன், கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு வாயிலாக, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசு சார்பில் பசுமை வீடுகள் திட்டம், கலைஞர் கனவு இல்லம் போன்ற திட்டங்களில், அதிகபட்ச மானியத்துடன் வீடு கட்ட உதவி செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்கள், அரசு மானியத்துடன் வீடுகட்டி வசிக்கின்றனர்; இருப்பினும், வீடுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு செய்ய முடிவதில்லை.வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும், ஏழை, எளிய மக்கள் நலனுக்காக, குறிப்பிட்ட கால இடைவெளியில், வீடு பராமரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் நிதியாண்டில், முதல்வரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், வீடு பராமரிப்பு மானியம், 2.40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, 2011ம் ஆண்டு வரையில், அரசு மானிய உதவியுடன் கட்டிய வீடுகளை பராமரிக்க, தகுதியானவர்களுக்கு, 2.40 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வரும் நிதியாண்டில், 2011ம் ஆண்டு வரை, அரசு மானியத்தில் கட்டிய வீடுகளை பராமரிக்க, 2.40 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யப்படும். மேற்கூரை பழுதாகியிருந்தால், அவற்றை அகற்றிவிட்டு, சுவர்களை வலுப்படுத்தி, நவீன 'பப் பேனல்' எனப்படும் மேற்கூரை வேய்ந்து, வீடுகளை புதுப்பிக்கலாம். வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம் குறித்து ஊராட்சி பகுதி மக்களுக்கு அறிவிப்பு செய்து, விண்ணப்பிக்க போதிய அவகாசம் வழங்கப்படும்,' என்றனர்.