நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்
அவிநாசி; அவிநாசி நீர் வளத் துறை அலுவலக வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத அரசு வாகனங்கள் துருப்பிடித்து வீணாகி வருகிறது.அவிநாசி, சேவூர் ரோட்டில் பொதுப் பணித்துறையின் கீழ் இயங்கும் நீர் வளத்துறையின் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உள்ளது. சிறப்பு திட்ட வட்டத்தின் கீழ் இந்த அலுவலகம் செயல்படுகிறது.இங்கு கண்காணிப்பு பொறியாளர் பயன்பாட்டுக்கு அரசு சார்பில் அலுவலக வாகனம் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதேபோல், பிற பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கும் அரசு வாகனம் உள்ளது.அலுவலக பயன்பாட்டில் இருந்து வந்த சில வாகனங்கள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அவ்வகையில் தற்போது மூன்று வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் ஓரம் கட்டி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இவற்றுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதனால், முன்னர் பயன்படுத்திய வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் அலுவலக வளாகத்தில் செடிகொடிகளுக்கு மத்தியில் வீணாக நிறுத்தப்பட்டுக் கிடக்கிறது. இவற்றில் தற்போது பெருமளவு செடி, கொடிகள் படர்ந்தும் காட்சியளிக்கிறது.பயன்படுத்த முடியாத வாகனங்கள் என்றாலும் அவற்றை முறையாக சான்று பெற்று உரிய வழிமுறைகளின் படி ஏலம் விட வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், கண்டு கொள்ளாமல் உள்ளதால் இவை துருப்பிடித்து மண்ணோடு மண்ணாக போய்விடும் நிலை ஏற்படும்.