சம்பள உயர்வு; பாத்திர தொழிலாளர் எதிர்பார்ப்பு
அனுப்பர்பாளையம்:பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் வரும் டிச. 31 உடன் நிறைவு பெறுகிறது. திருப்பூர், அடுத்த அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், காளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடம், பானை, டேக் ஷா, அண்டா உள்ளிட்ட அனைத்து வகைப் பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐந்தாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இத்தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த 2023 ஜனவரி மாதம் உருவான சம்பள ஒப்பந்தம் வரும் டிச. 31ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை விரைவாக தொடங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். --- நடவடிக்கை தேவை கடந்த முறை எவர்சில்வர் பாத்திரத்திற்கு 16 சதவீதமும், பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு 22.2 சதவீதமும், ஈயப் பூச்சுப் பாத்திரங்களுக்கு 29.5 சதவீதமும் ஒவ்வொரு முறையும் சம்பள ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடக்கும்போது. உடனடியாக தீர்வு ஏற்படுவதில்லை. இந்தமுறை அவ்வாறு இல்லாமல் ஒப்பந்தம் முடியும் முன்னரே தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். கடந்த முறையை விட விலைவாசி உயர்வுக்கேற்ப கூடுதல் சம்பள ஒப்பந்தத்தை பெற்றுத்தர அனைத்து தொழிற்சங்கங்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். - பாத்திரத் தொழிலாளர்கள்.