சங்கமாங்குளம் - தாமரைக்குளம் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில், 120 ஏக்கர் பரப்பளவு உள்ள தாமரைக் குளம், 240 ஏக்கர் கொண்ட சங்கமாங்குளம் ஆகியவற்றில் மழைநீர் தேங்கியுள்ளது. தற்போது அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் நீர் வர துவங்கியுள்ளது. இரு குளங்களிலும் அதிகளவில் மீன்கள் உள்ளது.இதனால் வலசை வரும் பறவைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. ஆனால், இரு குளத்தின் கரைகளிலும் குளத்தின் நீர் வரும் பாதைகளிலும் கட்டடக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றை கொட்டிச் சென்றுள்ளனர்.இதனை, அவிநாசியில் இயங்கி வரும் 'குளம் காக்கும் இயக்கத்தினர்' மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர்ந்து ஆறு வாரங்களாக சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி வருகின்றனர்.தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரு குளத்தையும் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ள இருப்பதாகவும் குளத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க இருப்பதாகவும், அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.