மக்கள் தொகைக்கேற்ப துாய்மை காவலர் தேவை; நிரந்தரமாகும் சுகாதார சீர்கேடு
உடுமலை ; மக்கள் தொகைக்கேற்ப ஊராட்சிகளில், கூடுதலாக துாய்மைக்காவலர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளாததால், கிராமங்களில், சுகாதார பணிகள் முடங்கி, சுகாதார சீர்கேடு நிரந்தரமாகியுள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில், திடக்கழிவு மேலாண்மை திட்டம், கடந்த சில ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.கிராமப்புற சுகாதார மேம்பாட்டுக்காக, அதிக எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட்ட திட்டத்தின் நிலை, தற்போது பரிதாபமாகியுள்ளது.பெரும்பாலான கிராமங்களில், ரோட்டோரங்களில், குப்பை குவிந்து கிடக்கிறது; திறந்த வெளியில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. நீர் நிலைகளிலும் குப்பையை கொட்டி வருகின்றனர். அனைத்து இடங்களிலும் சுகாதார மேம்பாடு இல்லாமல், சீர்கேடு அடைந்து வருகிறது.இதற்கு இத்திட்டத்தில், நிலவும் நடைமுறை சிக்கல்களுக்கு, மாநில அரசு தீர்வு காணாமல் அலட்சியம் காட்டுவது, முக்கிய காரணமாக உள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 150 வீடுகளுக்கு ஒரு துாய்மைக்காவலர் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் வீடுதோறும் சென்று குப்பையை பெற்று திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு கொண்டு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பிரிக்கவேண்டும்.பின்னர் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க வேண்டும். மக்காத குப்பையை சுத்தப்படுத்தி மறுசுழற்சி செய்ய வேண்டும் அல்லது உரிய வழிகாட்டுதல்படி அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், ஊராட்சிகளில், மக்கள் தொகைக்கேற்ப துாய்மை காவலர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும், குப்பையை உரக்கிடங்கிற்கு, கொண்டு செல்ல குறைந்தளவு பேட்டரி வாகனங்களே வழங்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் பழுதடைந்தால், சீரமைக்க வழியில்லாமல், காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் வாகனங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே, குடியிருப்புகளில், குப்பையை சேகரித்து, அருகிலுள்ள, திறந்தவெளிகளில் கொட்டி விடுகின்றனர்.இவ்வாறு, ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், முறையாக செயல்படுத்தப்படாமல், அனைத்து பகுதிகளிலும், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக, தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.