இன்று பணிக்கு திரும்பும் துாய்மை பணியாளர்கள்
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள், கள மேற்பார்வையாளர்கள், வாகன டிரைவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாதம் தோறும் 7ம் தேதி, சம்பளம் வழங்கப்படும். இம்மாதம் 9ம் தேதி வரை சம்பளம் வழங்கப்படவில்லை என, 4வது மண்டலத்துக்கு உட்பட்ட டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அடுத்த நாள் துாய்மைப் பணியாளர்களும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு நாட்கள் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் குப்பை கழிவுகள் அகற்றும் பணியில் தேக்கம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் ஆலாங்காடு, மாட்டுக் கொட்டகை வளாகத்தில் உணவு சமைத்து சாப்பிட்டு தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர், கமிஷனர், ஒப்பந்த நிறுவனத்தினர், துாய்மைப் பணியாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நடப்பு மாத சம்பளம் உடனடியாக வழங்கப்பட்டது, போனஸ் வரும் 15ம் தேதி வழங்குவது; அரசு நிர்ணயித்த சம்பளத்தை விரைவில் வழங்குவது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. நேற்று வார விடுமுறை என்பதால் இவர்கள் பணிக்குச் செல்லவில்லை. இன்று முதல் வழக்கம் போல் துாய்மைப் பணியாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பவுள்ளனர்.