துாய்மை பணியாளர் 3வது நாளாக போராட்டம்
திருப்பூர்; திருப்பூரில், மூன்றாவது நாளாக நேற்றும் துாய்மை பணியாளர்கள், காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.திருப்பூரில், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கடந்த ஜூன் 30ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.சி.ஐ.டி.யு., சார்பில் நடத்தப்பட்டுவரும் இந்த போராட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரி, துாய்மை பணியாளர்கள், ஏராளமானோர், திருப்பூர் - பல்லடம் ரோட்டில், கலெக்டர் அலுவலகம் எதிரே, நிழற்குடைக்குள் அமர்ந்து, தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, 878 ரூபாய்; ஓட்டுநர் மற்றும் குடிநீர் திறப்போருக்கு 921 ரூபாய் வீதம் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், மூன்றாவது நாளாக நேற்றும், காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், 350 பேர், காத்திருப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.காலை முதல் இரவு வரையில் போராட்டத்தில் அமர்ந்துவிட்டு, இரவில் வீடுகளுக்குச்செல்கின்றனர்; மீண்டும் மறுநாள் காலை முதல் போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்டம் வாபஸ்
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜ் கூறுகையில், ''கோரிக்கையை 15 நாட்களுக்குள், நிறைவேற்ற, நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்படும்.மாவட்டத்தில் உள்ள, 14 பேரூராட்சிகளுக்கு கலெக்டர் நிர்ணயித்த ஊதிய தொகையை வழங்குவதாகவும், ஊராட்சி துாய்மை காவலர்கள் கோரிக்கை குறித்து ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்புவதாகவும் உறுதி அளித்துள்ளனர். போராட்டம் கைவிடப்படுகிறது,'' என்றார்.