துாய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
- நமது நிருபர் -உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன் திடீரென அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பணிகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் நடந்து வருகிறது.அவ்வகையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்த நிறுவனங்கள் உரிய சம்பளம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில் இப்பிரச்னை குறித்து, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து, அதை வழங்க உத்தரவிடப்பட்டது. அவ்வகையில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணியாற்றும், துாய்மைப் பணியாளர் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 878 ரூபாய்; ஓட்டுநர் மற்றும் குடிநீர் திறப்பாளருக்கு 921 ரூபாய் என தினசரி ஊதியம் வழங்க வேண்டும்.இதை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணியாற்றும் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதில் சமாதானமடையாத தொழிலாளர்கள் திடீரென பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் எதிரே ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி தொழிலாளர்கள், அங்குள்ள பஸ் ஸ்டாப் நிழற்குடைக்குள் சென்று அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.