சரவெடி: மனுக்களில் தெறித்த மக்களின் குமுறல்
தியாகி குமரன் பெயர் சூட்டுங்க
'திருப்பூர் - தாராபுரம் ரோடு, கோவில்வழியில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸ்டாண்டுக்கு, கொடி தியாகி குமரன் பெயர் சூட்டவேண்டும்' என, இந்து மக்கள் எழுச்சி பேரவையினர் மனு அளித்துள்ளனர். மதுக்கடை கூடாது
திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., வினர்:பெருமாநல்லுார் - குன்னத்துார் ரோட்டில், தனியார் மதுக்கடை அமைய உள்ளது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 100 மீட்டர் அருகிலும், மாநில நெடுஞ்சாலையை ஒட்டியும், அன்னமார் கோவில், குடியிருப்பு பகுதிக்கு மத்தியில், மதுக்கடைக்கான கட்டுமான பணி நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பெரும் இடையூறுஏற்படும்வகையில் மதுக்கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிமம் வழங்ககூடாது. அபாயகர விளம்பர பலகை
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை:திருப்பூர் மாவட்டத்தில், உயரமான கட்டடங்களுக்கு மேல் ராட்சத விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. காற்று, மழைக்கு, விளம்பர பலகைகள் விழுந்து, உயிர்பலி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.பல்லடத்தில் நால்ரோடு சந்திப்பில் உள்ள பழைய கட்டடம் மீது மிகப்பெரிய விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறப்பட்டு வைக்கப்பட்டாலும், அந்த அனுமதியை ரத்து செய்து, அபாய நிலையில் உள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்றவேண்டும். மீண்டும் பணி வழங்குங்க
ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் விடுதிகளில் பணிபுரிந்த தற்காலிக துாய்மை பணியாளர்கள், மீண்டும் பணி வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், கலெக்டரிடம் மனு அளித்தனர். பசுமையை அழிக்கலாமா?
கருவலுார் பகுதி மக்கள்:கருவலுார் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு அகலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இதற்காக, ரோட்டோர மரங்களை வெட்டி வீழ்த்துகின்றனர். பசுமையை அழிப்பது வேதனை தருகிறது. வெட்டப்பட்ட இடங்களில் புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்க கருவலுார் ஊராட்சி நிர்வாகம் ஆவன செய்யவேண்டும். பதிவு எண் இன்றி வாகனங்கள்
சமூக ஆர்வலர் சரவணன்:திருப்பூர் மாநகரம் உள்பட மாவட்டத்தினுள்ள அனைத்து பகுதிகளிலும், பதிவு எண் இல்லாமல் இல்லாமல் டூவீலர், நான்கு சக்கர வாகன இயக்கம் அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம், போலீசார், போக்குவரத்து போலீசார், பதிவு எண் இல்லாத, நம்பர் பிளேட்களில் விதிமீறல் செய்யும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். உதவித்தொகை வழங்கப்பட்டது
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 18 மாணவர்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை; பயனாளிகள் மூன்றுபேருக்கு, தலா 17 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 51 ஆயிரம் ரூபாய் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை என, 21 பேருக்கு, மொத்தம் 1.02 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.வேலம்பட்டி சுங்கச்சாவடியில்23 முதல் காத்திருப்பு போராட்டம்திருப்பூர் தெற்கு தாலுகா, வடக்கு அவிநாசிபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட, வேலம்பட்டியில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வரும் 24 ம் தேதி முதல், வேலம்பட்டி டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து டோல்கேட் திறக்க கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்தனர்.இந்நிலையில், வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைந்துள்ள இடத்தில், நாளை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.''வேலம்பட்டியில் சட்ட விரோதமாக நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது. வரும் 23 ம் தேதி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில், திருப்பூர் மாநகரில் உள்ள அனைத்து பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்'' என்று இச்சங்கத்தினர் அறிக்கையில் கூறியுள்ளனர்.